Saturday, 10 June 2017

அந்த ஒரு சொல்!

 
                                                                 
நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்.உமா என்ற ஆசிரியரை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஹிந்தி ஆசிரியர் எல்லோரும் அவரை உமாஜி என்று அழைப்போம்.அருமையாக ஹிந்தி சொல்லி தருவார்.அதனாலே எனக்கு ஹிந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஒருநாள் வகுப்பிற்கு வந்தார்.அன்று என்ன பாடம் எடுக்க போகிறார் என்று எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம்.உமாஜி இன்று பாடம் எதுவும் எடுக்கப்போவதில்லை என்றும் முக்கியமான அறிவுரைகள் வழங்க போவதாகவும் சொன்னார்கள்.எங்களுள் சிலர் செவிகளை கூர்மையாக்கி கொண்டோம்.பலர் இமைகள் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

அன்று அவர் குமுளி(bubble gum) எடுத்து கொள்வதால் என்னென்ன தீமைகள் இருக்கிறது.அது உடலிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எடுத்து சொன்னார்.காரணம்,உமாஜி வருகின்ற வழியில்  அப்போது பல மாணவர்கள் குமுளியை ஊதிக்கொண்டிருந்தார்களாம். அரை மணிநேரம் அதனை பற்றி தெளிவாக பேசினார்.

துரித உணவுகள் உண்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.நான் ஆழமாக கேட்டுக்கொண்டிருந்தேன்(பாடத்தை கூட இது வரை அப்படி கவனித்து இல்லை).மெல்ல மெல்ல என் எண்ணம் விரிந்தது.நான் அடிக்கடி குமுளி பயன்படுத்துபவன்.தினமும் நண்பர்களோடு சேர்ந்து குமுளி இடுவேன்.எனக்கு பிடித்த ஆசிரியர் அறிவுறுத்தியத்திலிருந்து இன்று வரை நான் குமிழி பயன்படுத்துவதே இல்லை.பலசமயம் நண்பர்கள் வற்புறுத்தியும் நான் ஏற்க வில்லை.

அவர் பேசி 8 ஆண்டுகள் இருக்கும்.இன்னும் என் நினைவில் இருக்கிறது.அவர் சொற்படியே நடந்து வருகிறேன்,என் வாழ்வின் எஞ்சிய பகுதிகளும் ஒருபோதும் குமுளி பயன்படுத்தமாட்டேன் என மனதார சபதம் எடுத்துள்ளேன்.துரித உணவுகளை தான் அவ்வளவு சீக்கிரமாக விடமுடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறேன்.அந்த ஆசிரியர் எனக்கு பிடித்தவர் என்பதால் நான் அவர் அறிவுரையை கேட்கவில்லை.எனக்கு பிடித்தார் போல அன்று அவர் பேசியதால் தான் இன்று நான் பல தீயபழக்கங்களை கைவிட்டுள்ளேன்.


கோவை.சரவண பிரகாஷ்.

ஆசிரியர்களுக்கு ஒரு மாணவனின் கடிதம்!


மதிற்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு, 

உங்களால் பேரறிவோடு விளங்கும் ஒருவன்,நீங்கள் ஒளியேற்றி வைத்த அனல் விளக்கான ஒருவன் மிகுந்த மரியாதையோடும்,பரந்து விரிந்த மனதோடும் மாணவ சமுதாயத்தின் பிரதிநிதியாய் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 

நாளைய இந்தியாவின் எதிர்காலம் எங்களது கைகளில்,ஆனால் எங்களது எதிர்காலம் உங்களுடைய காலடியில் இருக்கிறது. 

வாழும் தெய்வங்களே!எங்கள் முன்னேற்றத்திற்கு ஏணிப்படிகளாய் இருப்பவர்களே,உங்கள் கரங்களை படிகளாக்கி அல்லவா நாங்கள் மேலுயர்ந்தோம்.இந்த சமுதாயத்தில் உன்னிப்பாக கவனிக்க படவேண்டியவர்கள் நீங்கள்!நிர்வாணத்தை மறைக்க நெசவு நெய்ந்த தொழிலாளர்களுக்கு இந்த சமுதாயம் தந்தது சவத்துணி தான் என்பது போல எங்கள் அறியாமையை அழித்து அறிவொளி அளிக்கும் உங்களை சமுதாயம் இன்னும் சிம்மாசனத்தில் ஏற்றவில்லை. 

மாணாக்கர்களின் வெற்றியில் வெற்றி அடைபவர்கள் நீங்கள்.பொறாமை கொள்ளாத ஒரே ஜீவன் நீங்கள்.பெற்றெடுத்த தாய் கூட பத்து மாதங்கள் தான் எம்மை வயிற்றில் சுமந்தாள்,ஆனால் பள்ளியில் பதினான்கு ஆண்டுகளும் கல்லூரியில் நான்காண்டுகளுமாக ஏறத்தாழ 18 ஆண்டுகள் எங்களுக்காக ஓடி ஓடி உங்கள் கால்கள் தேய்ந்திருக்குமே! 

நாங்கள் பொறுப்பான பதவியில் அமர வேண்டும் என்பதற்காய் காலமெல்லாம் நின்றுகொண்டே இருப்பவர்களே!உலகத்தின் கண்களுக்கு ஒளி மட்டுமே தெரியும்,ஏற்றிவைத்தவர்களை அது கணக்கில் வைத்துக்கொள்வதில்லை.இன்று பிரகாசமாக ஒளிவீசும் எங்களை ஏற்றி வைத்து தீக்குச்சிகளாய் கரைந்து போவார்கள் நீங்கள். 

இன்று வெற்றி மேடையை அலங்கரிக்கிற எல்லோரது பேச்சிலும் அவரது ஆசிரியர் பெயர் நிச்சயம் அடிபடும்.ஆனால் அந்த வேளையில் அந்த ஆசிரியர் அங்கிருக்கமாட்டார் அடுத்த படைப்பை உருவாக்குவதில் உழைத்து கொண்டிருப்பார். 

வெற்றியின் விலாசத்தை அடைந்த எல்லோர் வாழ்விலும் அவர்களை தட்டி கொடுத்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்.இன்று எங்கள் கிளைகள் கொஞ்சம் விரிந்திருக்கலாம் ஆனால் ஆசான்களே எங்கள் வேர்கள் வசிப்பது உங்களிடத்தில் தான். 

புதிய இந்தியாவின் பிரம்மாக்களே!காலப் பெருவெளியில் நம் சிலவற்றை மறந்து விட்டோம் அல்லது தொலைத்து விட்டோம்.உங்களுக்கும் எங்களுக்கமான உறவை புதுப்பித்து கொள்ள வேண்டிய சூழலில் காலத்தால் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.மிகுந்த பணிவோடு உங்களிடத்தில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.பிழையொன்றும் இல்லையேல் உரைக்கிறேன் தயைகூர்ந்து கேட்டருள்க! 

இந்தியாவில் கல்வியின் தரம் ஒருவேளை குறைந்திருக்கலாம்.ஆனால் நாளைய நாட்டின் தூண்களுக்கு குறை ஒன்றும் இருக்க கூடாது.இந்த கல்வி முறை 3 ஆண்டுகள் மூச்சுப்பிடித்து எப்படி ஒரு ஆற்றை கடக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி தருகின்றன.வாழ்க்கையிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என தற்காலிக தீர்வுகளை சொல்லி தரும் பாடபுத்தகங்களே பெருகி உள்ளன.கல்வி என்பது வாழ்க்கையை எப்படி ஜெயிக்கலாம் என்ற தாரக மந்திரத்தை சொல்லி தருவது.தன்னம்பிக்கை கற்று தருவது.தனித்திறனை வெளிப்படுத்துவது.சுயமாக சிந்திக்க கற்று தருவது. 

நாம் நாட்டின் இன்றைய கல்வி முறையில் எங்களுக்கு 100 சதவீத உடன்பாடு இல்லை.அக்குறையை கூட 
ஆசிரிய பெருமக்களே உங்களால் மாற்ற முடியும்.கணிதம்,பொறியியல்,வேதியல் இவற்றை மட்டுமே போதிப்பது ஆசிரியருடைய வேலை.அவற்றில் இருந்து இரண்டு நிமிடம் விலகி நின்று வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவது குருவினுடைய வேலை.நீங்கள் நல்ல ஆசிரியர்களாக இருக்கவில்லையென்றாலும் பரவாயில்லை தயவு செய்து ஒரு குருவாக இருங்கள்.ஏட்டு கல்வியோடு சேர்த்து ஒவ்வொரு கல்விநிலையங்களிலும் மறந்து போன வாழ்க்கை கல்வியை போதியுங்கள்.காலத்தால் இயந்திரமாக்கப்பட்ட நாங்கள் சில நிமிடங்களாவது மனிதர்கள் ஆவோம்.வஞ்சகம்மிக்க அறிஞனாக இருப்பதை காட்டிலும் அறிவற்ற ஒழுக்கமிக்கவனாக இருப்பதும் ஒருவகையில் சிறந்ததே. 

எங்களோடு மனதோடு மனம் விட்டு பேசுங்கள்.எங்களின் எண்ணங்கள் எல்லாம் உங்கள் சிந்தையில் குடியேறும்.முதலில் எங்கள் மன அழுக்குகளை போக்குங்கள்.எங்கள் மனம் என்னும் களர் நிலத்தை பண்படுத்துங்கள்.பிறகு அறிவை புகுத்துங்கள். 

குருட்டு உலகத்தால் நிராகரிக்கப்பட்ட,வேதனைகள் கண்ட,தாழ்வு மனப்பான்மை மிக்க எத்தனையோ மாணவர்களுக்கு தம் ஆசான்களின் கைகள் அல்லவா ஏணிப்படிகள்.இந்த கல்விமுறை பிகாசோவை சச்சின் ஆக்கவும் ,சச்சினை மில்டன் ஆக்கவும் ,மில்டனை காலம் ஆக்கவும் முயற்சித்து கொண்டிருக்கிறது.நீங்களும் அதற்கு துணைபோகாதீர்கள்.எங்களின் எதிர்காலத்தை உதடுகளால் உச்சரிக்கும் நீங்கள் தான் எங்கள் உண்மை நிலையை எங்களுக்கே அறிமுக படுத்தி அத்திறமையை ஊக்குவிக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பும் உங்களிடத்தில் ஒப்படைக்க பட்டிருக்கிறது.எத்தனை ஆயிரம் திறமைகள் மண்ணோடு புதைந்திருக்கும்,அத்திறமைகளுக்கு நீரூற்றி வளர்க்க வேண்டியவர்கள் நீங்கள்.தயவு செய்து நீங்கள் உங்களிடத்தில் உள்ள காலமையும் ,மில்டனையும்,சச்சினையும் அடையாளம் கண்டுகொண்டு ஊக்குவியுங்கள். 

உங்கள் கைக்குள் நாங்கள் இருக்கிறோம்.அதிகம் அழுத்ததிர்கள் உடைந்து விடுவோம்.லேசாக விடாதீர்கள் நழுவி விடுவோம்.எங்களை வளைக்கிற அவசரத்தில் உடைத்து உடைத்தீர்கள்.எங்கள் கனவுகளுக்கு உயிர் கொடுக்க வேண்டியவர்கள் நீங்கள்,சேதப்படுத்திவிடாதீர்கள்! 

உங்கள் சொற்கள் தான் எங்களுக்கு வேதமந்திரம்.அச்சொற்கள் எங்கள் தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும்.அச்ச்சொற்கள் கோழையையும் மாவீரனாக வேண்டும். ஒருபோதும் எங்களை தாழ்த்தி விட கூடாது.களிமண்ணை களிமண் என்று சொல்லிக்கொண்டிருப்பது உங்களை போன்ற பிரம்மக்களுக்கு அழகல்ல,அக்களிமண்ணையும் அழகிய சிற்பமாக வடிப்பதில் தான் உங்கள் கைவண்ணம் ஒளிந்திருக்கிறது. 
உங்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது நம்பிக்கையும்,உத்வேகமும்,வழிகாட்டுதலும் மட்டும் தான். 

பெரியயோர்களே!உங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பல சமயம் பொய்த்து போகசெய்திருக்கலாம்.அத்தனையும் மன்னித்து மறைக்கின்ற தாய் உள்ளம் கொண்டவர்கள் நீங்கள்.உங்கள் மாணவர்கள் எப்போது உங்களிடம் மனம் விட்டு பேசுகிறார்களோ அப்போது நீங்கள் உங்கள் பணியில் கால்வாசி ஜெய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். 

நீங்கள் கலங்கரை விளக்கமாக கூட மாறவேண்டும் கரை கிட்டத்தில் தான் என உற்சாகப்படுத்துங்கள் போதும்..! 

எங்களை மகான் ஆக்குவதற்கு முன் நல்ல மனிதனாகுங்கள் போதும்..! 

உங்கள் மீது ஆயிரம் கோடி நம்பிக்கைகளோடும்,வண்ணமயமான எதிர்கால கனவுகளோடும் வார்த்தைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறேன்,உங்கள் வார்த்தைகள் எங்கள் எதிர்கால வாழ்வின் தொடக்கமாக இருக்கும் என்ற எண்ணத்தில்....! 



-இப்படிக்கு 
உங்களால் உருவாகும் மாணவன். 

Monday, 5 June 2017

அவள் கொடுத்த முத்தம்!

                   

வெறுமை..நீண்ட காலமாய் மழையையே அறிந்திராத ஒரு பாலைவனம் போல் மனசெல்லாம் வெறுமை.நீண்ட நெடிய போராட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கண்ணுக்கு தெரியாத,உணரமுடியாத ஒன்று என் மனதை ஆக்கிரமித்தது..!

துக்கம் முடிந்த வேளையில் கூட தூக்கம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.விருக்கென எழுந்தேன்.பழையவற்றை அசைபோட்டேன்.

பெரும் வெற்றிகளை தருவதற்கு முன்னால் வாழ்கை சில பயிற்சி வகுப்புகள் எடுக்குமே அந்த சமயம் அது.ஒரு செயல் என்னால் முற்றுபெறவேண்டிய சூழல்.அந்த வேளை  அந்த வேலை  எனக்கு என்னிலும் மிக உயர்ந்ததாகத்தான் தெரிந்தது.பிரமித்து போனேன்!

என்னை பார்த்து உலகம் சிரித்தது.சாக்கடை எப்படி சாமி ஆகும் என சொல் விளையாட்டு ஆடியது.என்னை கைபந்துகள் ஆக்கி கீழே போட்டு உருட்டியது.

வாழத்தெரியாதவன் என வசை பாடியது,உன்னால் முடியுமோ என அய்யப்பட்டது!

என் "சா" தனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காய் புது சாதனை படைக்க வேண்டும் என எண்ணத்தில் குறித்துவைத்தேன்.

இரவுகளை பகலாக்கி ,பகல்களை இரவுகளாக்கி உழைத்தேன்.கொஞ்ச காலம் பசி தூக்கம் மறந்தேன்.

பட்டினி கிடந்தேன்,லட்சிய பசிக்கு யாரும் உணவிடாத காரணத்தால்.

மெல்ல மெல்ல ஐயம் தெளிந்தேன்,நிதானம் காத்தேன்.மெல்ல மெல்ல விரும்பிய செயல் கைகூடியது.வெற்றி கனி பறித்தேன் .

தேன் போல இன்பங்கள் திளைத்தது.வசை பாடிய உள்ளமெல்லாம் வாழ்த்தியது.இதயத்தை பெருமை ஆக்கிரமித்தது.

சொல்லிலடங்கா பாராட்டுக்கள்,என்னன்ற வாழ்த்துக்கள்,மலையென பரிசுகள்.உற்றார் உறவினர் ஒரு புறம்.சுற்றமும் நட்பும் ஒரு பெரும்.

ஆனாலும் என் இதயம் தனக்குரிய எதோ ஒன்றை தொலைத்துவிட்டதை போல் ஓர் உணர்வு அல்லது பிம்பம்.

தனிமையின் கரம் பிடித்தேன்.இப்போது இந்த தனிமை எனக்கு கசப்பாக இல்லை.காரணம் தனிமையின் கரம்  எனக்கு தேவைப்பட்டது.

கேள்வியே இல்லாத ஒன்றிக்காக விடை தேடும் பயணத்தை தொடர்ந்தேன்.என் பாதை எதுவென்று தெரியாமல் எதிர்ப்பாதையில் நடந்தேன்.எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாததை போல் ஒரு எண்ணம்.

நடந்து நடந்து கால்களும் தேய்ந்தது,அந்தியும் சாய்ந்தது.அது பூங்கா.மாலை மயக்கத்தில் யாருமற்ற பூங்கா.எனக்கான   சிம்மாசனமாய் பச்சை நிற இருக்கை.அமர்ந்தேன்.தனிமையின் ராஜனனேன்.என் எண்ணக்குதிரைகளை லாடங்கள் இல்லாமல் அவிழ்த்து விட்டேன்.அந்த மண்ணில் விட்டு விட்டு மழை பெய்தது.என் கண்ணீர்த்துளிகள்!

மனமெங்கும் குழப்பம்,வாடிய முகத்தோடு சிந்தனையில் ஆழ்ந்தேன்.திடுமென்று ஒருத்தி அருகில் வந்தமரந்தால்.சில வினாடிகளுக்கு பிறகு தான் என் கண்கள் அவளை படம் பிடித்தது.
என்ன சோகம் என்று வினவினாள்,என்ன சொல்லுவேன் எது சொல்லுவேன் காரணம் ஏதும் அறிகிலேன்.சொற்கள் வெளிநடப்பு செய்யதது.எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் காவங்கு அரசாங்கம் நடத்தியது.

அன்பினால் வாழ்வபவள் போலும்.அன்பான பார்வையால் என் உள்ளத்திற்குள் ஒரு அங்குலம் நுழைந்தாள்.என் தடை பிடித்து தூக்கினாள் அப்போது தான் எழுந்தேன்.தலையை மெல்ல வருடி கொடுத்தால்.உள்ளம் உறைந்து போனேன்.என் குழப்ப  எண்ணங்கள் ஒவ்வொன்றும் அந்த வருடல்களில் சுடப்படுவதாய் எனக்குள் ஒரு ஆனந்தம்.கண்மூடி ரசித்தேன்.வருடியவள் கொஞ்சம் அருகில் வந்து நெற்றிப்பொட்டில் முத்தமிட்டாள்.கண்முடி திறப்பதற்குள் இறைவனை போல சட்டென்று மறைந்தாள்.

அவள் பேசிய மௌன மொழியை இப்பொது தான் வாழ்க்கை எனக்கு மொழிபெயர்த்து தந்தது.யாரென்ற தெரியாத அவள் என்னிடம் அன்பு மொழி பேசினாள்.கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாத மகிழ்ச்சி என்னுள்.சோக எண்ணங்கள் எல்லாம் வேரோடு அறுக்கப்பட்டதை போல் ஓர் குதூகலம்.சொல்லில் வரையறுக்க முடியாத அன்பை என்னுள் உற்பத்தி செய்தது.

காற்றில் அசையும் மரங்கள் என் பெயரை உச்சரிப்பதாகவும்,பூமி தாய் என் பிஞ்சு பாதங்களை தாங்குவதில் மகிழ்ச்சி கொள்வதாகவும்,இந்த சூரியன்,நிலா,நட்சத்திரம்,உலகம் எல்லாம் என்னை நேசிக்கவே படைக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன்.

அந்த  60 வயது கிழவியின் முத்தம்  எப்படி என் மனோநிலையை மாற்றியது  என்பதை இப்போதும் என்னால் யூகிக்க முடியவில்லை.

வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்.தெளிந்த மனம் பெற்றேன்.

நண்பர்களே!"வாழ்க்கை சில சமயம் மகிழ்ச்சியையும்,காதலையும் நாம் எதிர்பாராதவைகளிடத்து ஒளித்து வைத்திருக்கும்.அது வெளிப்படும் போது தெளிவு பிறக்கும்!"


கோவை.சரவண பிரகாஷ்.