சிறுகதைப் பட்டறை
‘எனக்கு கதை சொல்லத் தெரியாது’ என்று சொல்கிறவர்கள் இருக்கலாம். ஆனால் ‘என்னிடம் கதை இல்லை’ என்று சொல்கிற ஒரு மனிதனைக் கூட கண்டுபிடிக்க முடியாது. நம் ஒவ்வொருவரிடமும் நூறு நல்ல கதைகளாகவது உண்டு. நூறு அதிகமெல்லாம் இல்லை. நிச்சயமாக நூறு தேறும். இந்த மனம் இருக்கிறதே? ஒரு பாழுங்கிணறு. பாதாளக் கரண்டி கொண்டு கிளறினால் அள்ளி எடுத்து வெளியில் கொட்ட முடியும். அப்படிக் கிளறி சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் புதைந்தே கிடக்கும்படியாக விட்டுவிடுகிறார்கள்.
அவ்வளவுதான் வித்தியாசம்.
எழுதுகிற விருப்பம் எல்லோருக்குமே ஏதாவதொரு தருணத்தில் வந்து போயிருக்கும். ‘ஒரு காலத்தில் நானும்தான் கவிதை எழுதினேன்’ என்றோ ‘என்னுடைய சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன’ என்றோ சொல்கிற மனிதர்களை எங்கேயாவது சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம். ‘அப்புறம் ஏன் எழுதல?’ என்று கேட்டால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் நம்மை சமரசப்படுத்தாத காரணமாக இருக்கும்.
அலசிப் பார்த்தால் தான் விரும்புகிற எழுத்துவடிவம் வசமாகததுதான் முக்கியமான காரணமாக இருக்கும். எழுதும் போது எழுத்தின் சரியான வடிவத்தைப் பிடித்துவிட வேண்டும். கொஞ்ச நாட்கள் பிடிக்கக் கூடும். ஆனால் எழுத்து மீது சலிப்பு வருவதற்குள் எட்டிப் பிடித்துவிட வேண்டும். அதுதான் மிக முக்கியம். அப்படி ஒரு வடிவத்தைப் பிடித்துவிட்டால் அதுவே தனது கொக்கியில் நம்மை மாட்டிக் கொள்ளும். எழுத்து மீது நமக்கு ஈர்ப்பும் காதலும் வந்துவிடும். பிறகு நாமாக விரும்பினாலும் அது நம்மை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாது. இதுதான் சூட்சமம்.
பதின்ம வயதிலும் இருபதிலும் முப்பதுகளிலும் எழுதுகிற எத்தனிப்பு ஒவ்வொருவருக்குமே எட்டிப் பார்க்கும். அப்பொழுது சரியான வாய்ப்புகளும், நம் எழுத்தை சற்றே மடை மாற்றிவிடுகிற ஆசானும் கிடைத்துவிட்டால் நமக்கான எழுத்து வடிவத்தை எட்டிப் பிடித்துவிடலாம்.
எழுத்து என்பதே பயிற்சிதானே?
தவம், புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என்றெல்லாம் யாரேனும் அளந்துவிட்டால் நம்ப வேண்டியதில்லை. எழுதுவதற்கான தொடக்கம் கிடைத்துத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தால் எழுத்து வசமாகிவிடும். எழுதிக் கொண்டேயிருக்க மெல்ல மெல்ல நமக்கென்று எழுத்தின் தனித்த வடிவம் உருப்பெறும். ஒரு கட்டத்தில் நம்முடைய comfort zone ஐ அடைந்துவிடுவோம். அதன் பிறகு வெவ்வேறு எழுத்தாளர்களை வாசிப்பதும், அவர்களின் எழுத்துக்களின் வெவ்வேறு கூறுகளை அலசுவதும், நம்முடைய எழுத்தைச் செதுக்குவதும், புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்வது நம்முடைய உழைப்பு மற்றும் எழுத்துக்கான அர்ப்பணிப்பு சார்ந்த விஷயங்கள்.
ஆக, எழுதுவதற்கான எத்தனிப்பு இருக்கிற இளைஞர்களைச் சற்றே கிள்ளிவிட்டால் போதும். துளிர்த்துவிடுவார்கள். கிள்ளிவிடுகிறவர்கள் பெருந்தலைகளாக இருந்தால் மோதிரக் குட்டுதான்.
லாவண்யா சுந்தரராஜன் ஒரு அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அவரது அமைப்பான உயிரோடையும் காலச்சுவடும் சேர்ந்து சிறுகதை எழுத்துப் பட்டறையை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முப்பது வயதுக்குள்ளானவர்கள் யாரேனும் சிறுகதை எழுதுகிறவர்களாக இருந்தால் ஒரு நல்ல வாய்ப்பு. திண்டுக்கல்லில் மூன்று நாட்கள் பட்டறையை நடத்துகிறார்கள். மூன்று நாட்களில் ஐந்து அமர்வுகள். சிறுகதையின் அறிமுகம், அதன் வரலாறு, பங்கேற்பாளர்களின் கதைகளைப் பற்றிய கலந்துரையாடல், பொதுவான உரையாடல் என்று பிரித்து மேய்கிறார்கள். பிரித்து மேய்கிறார்கள் என்று சொன்னதற்கு அர்த்தமிருக்கிறது. பெருமாள் முருகன், சுகுமாரன், பாவண்ணன், க.மோகனரங்கன் ஆகிய பெருந்தலைகள்தான் பயிற்சியாளர்கள்.
கே.என்.செந்தில், மதிவாணன், குமாரநந்தன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை ஆட்களும் பங்கேற்கிறார்கள்.
இத்தகைய பயிலரங்குகள் ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த திறப்புகளை உண்டாக்கவல்லவை. திறந்த மனதோடு காதுகளைத் திறந்து வைத்தபடி அமர்ந்து வந்தாலே ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். சுகுமாரன், பெருமாள் முருகன், பாவண்ணன் மற்றும் மோகனரங்கன் ஆகிய நான்கு பேருமே இத்தகைய நிகழ்ச்சிகளுக்காக தங்களை வருத்திக் கொண்டு தயார் செய்து வருகிறவர்கள். நான்கு பேருமே எனக்கு ஒருவிதத்தில் ஆசிரியர்கள் என்பதால் மிகப்பெரிய மரியாதை உண்டு.
முப்பது வயதுக்குள் இருந்தால் மட்டும்தான் அனுமதிப்பார்களாம். லாவண்யாவிடம் சிறப்பு அனுமதி கோரவிருக்கிறேன். ‘முடிதான் கொட்டியிருக்கு; ஆனா இருப்பத்தஞ்சு வயசுதான் ஆகுது’ என்று சொல்லிப் பார்க்கிறேன். கலந்து கொள்ள அனுமதித்தால் நல்லது. இல்லையென்றால் ஏதாவது சான்றிதழை திருத்தி உள்ளே நுழைந்துவிடலாம் என்பதுதான் இறுதித் திட்டம்.
பிப்ரவரி 10, 11, 12 அல்லது 18, 19, 20 ஆகிய நாட்களில் நிகழ்வு நடக்கிறது.
வழக்கமாக இத்தகைய பட்டறைகளில் நுழைவுக் கட்டணம் கேட்பார்கள். இவர்கள் அதுவும் கேட்பதில்லை. உணவும், தங்குமிடமும் கூட அவர்களே கொடுத்துவிடுகிறார்கள். பெரிய மனம். வெற்றிகரமாக முடிக்கிற ஐந்து பேருக்கு ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை வாழ்நாள் முழுமைக்கும் வழங்குகிறார்களாம். பெரிய பெரிய மனம்.
முப்பது வயதுக்குள்ளாக இருப்பின் ஒரு சிறுகதையைச் சொந்தமாக எழுதி shortstories.workshop2017@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்து அழைத்தால் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றாலும் கவலைப் பட வேண்டாம். ப்ளாக் டிக்கெட் ஏதாவது உஷார் செய்ய முடியுமென்றால் முயற்சிப்போம்.
இத்தகைய பயிலரங்குகளுக்கான இடம், பணம், ஆட்களைத் திரட்டுவது என்பதெல்லாம் பெரிய வேலை. எழுத்துக்காகவும் இலக்கியத்திற்காகவும் இத்தகைய பணியைச் செய்கிறவர்களை தலை வணங்கிப் பாராட்டலாம்.
நிகழ்வு வெற்றிகரமாக அமையவும், நிறையப் பேர் பயன்படவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment