Thursday, 18 May 2017

நவீன காதல்!

நவீன காதல்
நொடி பொழுதும்
இரு மனங்கள் பிரியாத
காதல் இது !

பெற்றோரும்,உற்றோரும்,மற்றோரும்
சேர்த்து வைக்கும்
காதல் இது!

அஃறிணை காதல் என்றாலும்
அகிலத்தை ஆளும்
காதல் இது!

கண்ணாடி பார்க்கும் நேரத்திலும்
கழிவறை நேரத்திலும் விட்டு விலகாத
விசித்திர காதல் இது..!

முப்பொழுதும் கரங்களுக்கு
நாட்டியம் சொல்லித்தரும்
கவலையில்ல காதல் இது..!

அவளுள் அவன் தன்னையே
தொலைத்து கொண்டும் வாழும்
காதல் இது..!

அவனுக்காக அவள்
இமைப்பொழுதும் தூங்காத
உன்னத காதல் இது..!

அவளால் அவன் செவிகளுக்கு
100 முத்தங்கள், தினம் கொடுக்கும்
முத்தான காதல் இது..!

உறவுகளை மறந்து போய்
உலகம் அவளென புரிந்துகொண்ட
காதல் இது...!

அவள் விழிகளில் மட்டுமே
தன் முகம் பார்க்கும்
வினோத காதல் இது..!

பட்டறிவாளர்களும்,படிப்பறிவாளர்களும்
பாமரரும் செய்யும்
காதல் இது...!

இசை மொழி மட்டுமே
அறிந்த இரண்டு இதயங்கள்
கரைந்து போகும் காதல் இது..!

இன்றைய காளையர்களின்
கைபேசி
காதல் இது...!


கோவை.சரவண பிரகாஷ்

No comments:

Post a Comment