Tuesday, 3 July 2018

வாழ்க்கையை கண்டுபிடிப்போம்!

                                   
                                               
நெடுநாட்களுக்குப்  பிறகு,என் சிந்தைதனை பூட்டி வைத்த எண்ணங்களை சிரச்சேதம் செய்து என் எழுத்தாணி அவைகளுக்காய்  கசிகிறது.கைப்பேசி காதலாலும்,கால நேரமற்ற உழைப்பாலும் அவர்களை,அவைகளை  நீங்கள் மறந்திருக்க கூடும்.எண்ணத்தின் பிம்பங்களை எழுத்தினில் வடித்து அவர்களை,மறந்துபோனவர்களை அல்லது மறுத்து போனவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்....

கடிகாரத்தை காணவில்லை,கைபேசியை காணவில்லை,காலனியை காணவில்லை என்று நெடுநாட்கள் தேடுகிறீர்களே,ஐயகோ வாழ்க்கையை தொலைத்து விட்டு ஒருநாளும் அதனை தேட முற்படாமல் இருப்பது தான் எத்தனை விந்தை...

"கவனித்தால்" என்ற வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் நிறைய சம்மந்தம் இருப்பதாய் மனசு சொல்கிறது.


உங்கள் அலுவலகத்தில் ஒரு நாள் உங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றல் என்ன செய்வீர்கள்.யாரும் உங்களை கண்டும் காணாது போனால்,எப்படி இருக்கும்.நாள் முழுக்க உங்களை நிராகரித்து பேசாமல் இருந்தால் உங்கள் மனக்குமுறல்களின் எண்ணங்கள் சிவந்து போகாதா?அப்படிதான் அவர்களுக்கும்...இதில் அவைகளும் அடங்கும்

இரவு தூங்கும் போதும்,காலை எழும் பொது நம் முதன் முதலில் பார்த்து பரவசப்படுகிற விசியம் செல்போன் /தான்.(காதலன்/காதலிக்கு கூட இரண்டாம் இடம் தான்).அங்கு கவனிக்க மறந்துபோனவைகள் கண்கள் பறிக்கும் சூரிய உதயமும்,சுட சுட காபியும்,இதமான காலை காற்றும்...

இந்த காலை பொழுதின் மயக்கத்தில் ,மன்னிக்கவும் செல்பேசியின் மயக்கத்தில் உலவிக்கொண்டிருக்கும் உங்களுக்கு,உங்கள்  வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் வீடற்ற,நாதியற்ற,தன் வாழ்வில் சூரிய ஒளியின் பிரகாசத்தையே கண்டிராத பிளாட்பாரத்தில் வாழும் ஏழை முதியவரின் மனநிலையினை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.தினமும் அவரை நீங்கள் கடந்து போகும் போது கூட ஒன்றும் தெரிந்திருக்காது...

  பேருந்து பயணங்களில் தினமும் நீங்கள் காணும் உங்களுக்கு டிக்கெட் கொடுக்கும் நடத்துனரை புன்முறுவல் சிந்தி கவனித்தது உண்டா!

என்றேனும் ஒருநாள் உங்கள் கார் ஓட்டுனருக்கு "நன்றி" என்று மகிழ்ந்து கூறியதுண்டா!

சாலையைக்  கடக்க கஷ்டப்  படும் முதியவருக்கு உதவி செய்வதை பற்றி நினைத்திருக்கிறார்களா!

உங்களுக்கு கதவு திறந்து விடும் அலுவலகப்  பணியாளரை "சாப்பிட்டாயா?" என்று ஒரு வார்த்தையை ஒருநாளும் கேட்டிருக்கமாட்டீர்கள்.

அன்று அந்த சிக்னல் நிறுத்தத்தில் உங்கள் அருகில் இருந்த பச்சிளம் குழந்தை உங்களை பார்த்து சிரித்ததே,அதையும் கவனிக்க மறந்த கல் நெஞ்சத்தார் அநீரோ?

வாழ்க்கை என்பது உங்களை மட்டும் சார்ந்ததல்ல,உங்கள் வாழ்க்கை நாடகத்தில் பல காதாபாத்திரங்கள் இருக்கத்தான் செய்கிறது.

அலுவலக வேலை,அலைச்சல்,கோவம்,துரோகம்,வருத்தம்,ஏக்கம்,கவலை இவைகளால் நீங்கள் அவைகளை,அவர்களை கவனிக்காமல் இருந்திருக்கலாம்.உங்களுக்கு இப்போது வேண்டியதெல்லாம் ஓய்வு.உங்கள் வேலைப்  பணிகளில் இருந்து,உங்களைப்  பீடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து,உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பயங்களில் இருந்து....ஓயாமல் சுழலும் உங்கள் கால்கள் கொஞ்சம் இளைப்பாறட்டும் என்கிறேன் நான்...ஒரு நாள் ஒரே நாள் மட்டும்..

அதிகாலை எழுந்து சாலையோரம் நடந்து பாருங்கள்.ரம்மியமான மேகங்கள்,சூரிய ஒளி,செடியில் இளைப்பாறும் பனித்துளி,உங்கள் வருகைக்காகவே காத்திருந்த பூக்கள் இதுவரை நீங்கள் கவனிக்க மறந்த எல்லாம் உங்களுக்கு புது உலகை அறிமுகப்படுத்தும்,காதலின் தோல்விகளோ,வலிகளின் எச்சங்களோ,கவலைகளின் சாயலோ அங்கு காணாமல் போகும்.எதிரில் வருகின்ற முகங்கள் எல்லாம் பழகிய முகங்களாகத்  தெரியும்.நெடுக புன்னகை பூக்களை வீசியும் பெற்றும் செல்வீர்கள்.இந்த உலகமே உங்களை நேசிப்பதாய் உணர்வீர்கள்.அன்பும்,அமைதியும் நிறைந்த உங்கள் மனதை முதன் முதலாய் நீங்கள் கவனிப்பீர்கள்!

முதியோர் இல்லங்களில் அன்போடு சேர்த்து காலை உணவையும் பகிர்ந்து கொள்ளுங்கள்."நன்றி" என்ற வார்த்தை உங்களுக்கு உரியதாக இருக்கட்டும்.

உங்கள் வீட்டு தோட்டக்காரரிடம் கொஞ்சம் கதை பேசுங்கள்,கதை கேளுங்கள்...

வீதிகளில் பிள்ளைகளோடு சேர்ந்து நீங்களும் கபடி விளையாடுங்கள்,குழந்தையாய் மாறிப்போங்கள்!

உங்கள் தொடக்கப்  பள்ளி ஆசிரியரிடம் சென்று ஆசி வாங்குங்கள்!

கல்லூரி நினைவுகளை மன ஆழத்தில் இருந்து மேல் எழுப்புங்கள்,சண்டை போட்டு அன்றில் இருந்து இன்று வரை பேசாமல் இருக்கும் நண்பனை அவன் இருக்கும் இடம் சென்று பார்த்து அன்பில் கரைந்து போங்கள் .

அலமாரியை திறந்து உங்கள் பழைய நாட்குறிப்பை தூசு தட்டி எடுங்கள்.நினைவுகளின் தாக்கத்தில் உன் கண்ணீர் துளிகள் காகிதத்தை நனைக்கும்.

பழைய காதலிக்கு வாழ்த்து செய்தி அனுப்புங்கள்.கண்ணுக்கு தெரியாதவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்,கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு நாளும் உதவுங்கள்.

உங்கள் வலிகளுக்கான வழிகளை,பூட்ட பட்டக்  கதவுகளுக்கான சாவிகளை வாழ்க்கை உங்கள் அருகிலேயே வைத்திருக்கிறது.நீங்கள் தான் கவனிக்க மறந்து போனீர்கள்.

சில மெழுகுவர்த்திகள் அணைந்து இருக்கிறது என்று அலட்சியம் கொள்ளாதீர்கள்,நீங்கள் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதற்காய் அவை இருளில் இருக்கலாம்.வாழ்க்கை உங்களுக்கான தீர்வை ஒரு ஏழையிடமோ,முதியவரிடமோ,குழந்தையிடமோ,பழைய நண்பனிடமோ ஒளித்துவைத்திருக்கக்கூடும் இல்லையா ?

சின்ன சின்ன விசயங்களில் வாழ்க்கை நமக்கு பெரும் போதனைகளை கற்றுத் தரும்.நாம் காணும் எவரிடத்திலும் வாழ்வு நமக்கான பொக்கிஷத்தை கொடுத்துவைத்திருக்கும்.

தயவுசெய்து ஒரு நாள் மட்டுமாவது ஓடுவதை நிறுத்திவிட்டு நீங்கள் வாழுங்கள்!

வாழ்க்கை எல்லோரையும் தன்  இரு கரம் கொண்டு வாரி அணைத்து மகிழ்ச்சியை அள்ளித்தர தயாராக இருக்கிறது.வாழ்க்கை தரும் மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர்  பின்னப்பட்டிருக்கிறோம் என்பதை கவனிக்கும் போது வாழ்க்கை அமுதமாகிறது.

கவனிக்கப்படாதவைகளும்,கவனிக்கப்படாதவர்களும் கவனிக்கப்படும் போது வாழ்க்கையை கண்டுபிடிக்க முடியும்.

வாருங்கள்!வாழ்க்கையை கண்டுபிடிப்போம்!


கோவை.சரவண பிரகாஷ்
3/7/18

No comments:

Post a Comment