Sunday, 30 April 2017

எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்?


என்னை மன்னித்து விடுங்கள்.உங்களை பற்றி உங்களுக்கு தெரியாத சிலவற்றை நான் பட்டியல் போட்டுவைத்திருக்கிறேன்,அவை உங்களை சற்று முகம் சுளிக்கவைக்கலாம். 

"வேளைக்கு சோறு இல்லை,நாளைய சோற்றுக்கு வேலை இல்லை" என்ற புலம்பும் சாதாரண இந்திய பிரஜையின் மனநிலையில் இருந்துதான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு தெளிவு படுத்திக் கொள்கிறேன். 

"டீ யா இது!இதெல்லாம் மனுஷன் குடிப்பான,நீயெல்லாம் எப்போ மாறப் போறானே தெரியல!" என்று காலையில் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம் இரவில்அரசியல்வாதிகள் பங்கேற்கும் தொலைக்காட்சி 
விவாதங்களை பார்த்துவிட்டு "இந்த நாடு எப்போ மாறப்போதோ !" என்ற ஏக்கத்தோடு முடிகிறது ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நாளும். 

மாற்றம்..அன்றாட வாழ்வில் இந்த சொல்லை பல இடங்களிலும் பலதரப்பட்ட மக்களிடமும் நான் கேட்டிருக்கிறேன்.ஒரு நாள் காற்றோடு கதை பேசவும்,மண்ணையும் மனிதர்களையும் திரும்பி பார்க்கவும் என் கணினி உலகத்தை விட்டு வெளியே வந்தேன்.மக்கள் கூடும் இடங்களில் ஒரு காட்சி,ஒரு குழு எம்மக்களிடம் "உங்கள் நாடு முன்னேற யாரிடம் மாற்றம் வேண்டும்?" என்ற கேள்வியை பலதரப்பட்ட மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.நான் கவனித்தேன். 

அவர்கள் பதில்களின் வந்துதித்த வார்த்தைகள் அரசியல்வாதிகளிடத்தில்,அதிகாரிகளிடத்தில்,பொதுநலவாதிகளிடத்தில்,போலீஸகாரர்களிடத்தில்,பண்பாடு மறந்த மாணவர்களிடத்தில்,எழ மறுக்கும் இளைஞர்களிடத்தில் என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது. 

குழப்பமான மனதுடனும்,சோர்ந்த உடலுடனும் வீட்டை அடைந்தேன்."உதவாக்கரை,ஒரு வேலைய உருப்படியா செய்றதில்ல,உன்ன யாரு மாதப்போரான்னு தெரில.."என்ற தம்பியை நொந்துகொண்டிருந்தார் அப்பா. 

கொஞ்சம் சிரித்துக் கொண்டு,அதை மறைத்துக் கொண்டு என் அறையை அடைந்தேன்.அறைக்கதவினை தாளிட்டு மனக்கதவினை திறந்தேன்.எப்போதோ ஓய்வு பெற்ற என் நாட்குறிப்பை தேடி எடுத்தேன்.இப்போதுதான் என் நாட்குறிப்பில் உள்ள வெள்ளை பக்கங்களுக்கு மறுமணம் நடந்தது,என் எழுத்தாணியின் மைத்துளிகளால்.அந்த பக்கங்களில் நான் எழுதியது இது தான்... 

"இந்த இந்தியாவில் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள் ஆனால் ,யாரும் மாற தயாராக இல்லை".காந்தியும் பகத்சிங்க்கும் மீண்டும் பிறப்பார்களா என்று ஏங்குகிறார்கள் தம்முள் இருக்கும் காந்தியையும் பகத்சிங்யும் மறந்து போய் . 

10 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவன் இன்று தொழிலதிபராக இருக்கிறார்.100 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் போகும் என உலகம் நினைத்து கியூபா இன்று தனித்து நின்று ஜெய்திருக்கிறது.காரணம் ,அவர்கள் மாற்றத்தை வெளியில் இருந்து எதிர்பார்க்கவில்லை தம்முள் இருந்து வெளிக்கொணர்ந்தார்கள் .ஆனால் நம் இந்தியாவில் ஏழை எப்போதும் ஏழை தான் காரணம் நாம் எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற நேரத்தில் அதை உருவாக்க மறந்துபோகிறோம். 

உலகம் மாறவேண்டுமெனில்,நாடுகள் மாறவேண்டும் நாடு மாறவேண்டும் எனில் சமுதாயம் மாறவேண்டும்.சமுதாயம் என்பது தனிமனிதர்களின் கூட்டமைப்பின்றி வேறென்ன. 

ஓ உறங்கிப்போன இந்தியர்களே!விழித்திகொள்ளுங்கள்.ஒவ்வொரு இந்தியனும் தன் வாழ்க்கையை சீரமைக்க தன்னைத்தானே பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.உங்களுக்குள் ஒரு லெனின்,லிஙகன்,காந்தி உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களை நீங்கள் எழுப்பும் வரை இந்த தேசத்தின் தூக்கத்தையும் துக்கத்தையும் குலைக்க முடியாது. 

எல்லா தரப்பினரையும் குறை கூறிக் கொண்டிருக்கும் உன் எண்ணத்தில் வேண்டும் மாற்றம்! 
தானுண்டு தன் வேலையுண்டு என்று நினைக்கிற உன் சிந்தனையில் வேண்டும் மாற்றம்..! 
"நாமளாவது இந்த நாட்ட மாத்திரவதாவது ..." என்ற வரிகள் பொய்க்க உன் நம்பிக்கையில் வேண்டும் மாற்றம்...! 
ஒரு தலைவன் பிறக்க மாட்டானா என்ற ஏக்கத்தில் வேண்டும் மாற்றம்...! 
நம் வாழ்க்கை நிலை இப்படி தான் என்ற உன் குருட்டு நம்பிக்கையை மண்ணோடு புதைத்து விருட்சமாக உந்தி எழ வேண்டும் மாற்றம்! 

துருப்பிடித்த போன உன் நாடி நரம்புகளில் லட்சிய வெறி ஏற்ற உன் மனதில் வேண்டும் மாற்றம்..! 

தோழர்களே!என் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.இந்த உலகத்தில் எல்லாமே மாறுதலுக்குட்பட்டவை தான்.இந்த சமுதாயம் உங்களுக்கே தெரியாமல் உங்களை உங்களுக்குள்ளேயே ஆழமாக புதைத்து விட்டது.இப்போது இருக்கும் நீங்கள் நீங்கள் அல்ல.சாமுதாயத்தின் நாடகத்தில் சிறந்த நடிகன் விருத்திற்காக நீங்கள் நடித்துக்கொண்டிருக்கீர்கள். உங்களுக்குள் புதைக்கப் உங்களை தோண்டி எடுங்கள்,தேசத்தின் மாற்றத்திற்கான முதல் விதை உங்களுடையதாக இருக்கட்டும். 

நான் என்பதை நீங்கள் மாற்றியவுடன்,நீ என்பதை மாற்றுவதற்கான சக்தி சக்தி பிறக்கிறது உங்களிடம்.நீயும்,நானும் சேரும் போது சமுதாயத்தை மாற்றுவதற்கான சக்தி பிறக்கிறது. 

மாறுவோம்,மாற்றுவோம்! 


கோவை.சரவண பிரகாஷ் .

Friday, 28 April 2017

அவர்களோடு அவளும்..


அவர்களோடு அவளும்
என் வாழ்க்கை ஓட்டத்தில் 
நான் கடத்தியவைகளை விட என்னை 
கடந்து சென்றவர்கள் அதிகம்... 

கண்ணீரை பரிசை தந்து 
கண்ணிமைக்கும் நேரத்தில் 
காணாமல் போனோர்... 

தவறொன்றும் செய்யாத என்னை 
தவிக்க விட்டு 
சென்றோர்.. 

இதயத்தை இரண்டாக பிளந்து வலி 
கொடுத்து என் வழியில் இருந்து அகன்றோர்... 

கள்ளமில்லாத அன்பை பொழிந்ததால் 
என்னை 
வெறுத்து ஒதுக்கியோர்... 

உற்ற நண்பன் என சொல்லி ஒரு 
குற்றம் காணாமல் வேறொரு துணை கண்டு 
என்னை மௌனத்தால் அடித்தோர்.... 

அவர்களால் நான் காய்ந்து போனேன் ஆனால் 
என் இதயத்தின் ஒரு பிரேதேசத்தில் ஈரம் இன்னும் 
ஒட்டிக்கொண்டிருந்தது அவளுக்காக.... 

நான் உன்னை காதலிக்கவில்லை என்ற சொற்களை விட 
என் காதலை நீ புரிந்துகொள்ளக் கூட இல்லை என்பதுதான் 
இந்த கர்ணனை சாய்த்து விட்ட பிரம்மாஸ்திரம்... 

கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு 
கண்களும் காய்ந்தது,கவலை என்னை 
நினைத்து கவலைப்படுகிறது... 

கொட்டிய அன்புகள் குப்பைத்தொட்டியில் 
இருக்கக் கண்டு எனை கொன்றுபுதைக்கும் 
வரமொன்று கேட்டேன் இயற்கையிடம்... 

இறைக்கு கூட என்மீது 
இரக்கம் இல்லை என்பதை 
இப்பொது புரிந்துகொண்டேன்.. 

அவர்களை போலவே அவளும் 
என்னை காயப்படுத்தி போகிறாள்,போகட்டும் 
தனிமையின் கரம் பிடிப்பேன்...நான்...! 


சரவண பிரகாஷ்.

நினைவலைகள்


யாரது.யாரது...? 
என் தூக்கத்தை களைத்து 
துக்கம் ஏற்படுத்தியது..! 

என்ன இது?அச்சத்தின் 
பிடியில் நான் எப்போது 
அகப்பட்டேன்..! 

ஆற்ற முடியாத 
கவலை ஏன் இப்போது 
என்னை அள்ளி கொல்கிறது..! 

ஓ!இது அவளின் நினைவலைகள் 
என்று புத்திக்கு எடுத்துரைத்தது 
மெல்ல மெல்ல மனம்..! 

அழுகை,ஏக்கம்,ஆனந்தம் 
கவலை எல்லாம் ஒருசேர 
என் உணர்வை ஆக்கிரமித்தன...! 

அவள் கனவுகளை கொன்றவன் 
ஆதலால் என் நித்திரையை 
கொள்ள வந்தாள் போலும்..! 

நாங்கள் காதல் மொழி 
பேசிய நாட்களை காலம் 
கணக்கெடுத்துவைத்திருக்கும்...! 

கங்கை கூட வற்றிப்போகலாம் 
நம் காதல் நதி வற்றாது என 
வாய்மொழி பேசியவள் தான்..! 

உன் காதல் விழியே 
என் காயத்திற்கு மருந்து என 
கண்ணியமாக சொன்னவன் நான் ..! 

நான் அவளானேன் 
அவள் நான் ஆனாள் அதனால் 
காதல் காதலாயிற்று...! 

எங்கள் காதலின் இடையில் 
சதிசெய்து ஜெய்ததது 
விதி..! 

சாதி என் சட்டை பிடித்ததாலும் 
சம்பிரதாயம் அவளோடு சண்டை பிடித்ததாலும் 
சமுதாயம் எங்களை சந்தேகித்ததாலும் 

எங்கள் காதல் என் இன்றைய 
கண்ணீரைப் போல உலகத்திற்கு 
தெரியாமல் மறைந்துபோனது.... 

ஆனால் எங்கள் காதலும் 
கண்ணீரும் இன்று வரை 
நிஜம்..! 

ஒவ்வொரு மனிதனின் இதயஒரத்திலும் 
ஒரு அழுகை,ஒரு பயம் 
ஒரு தோல்வி,ஒரு அவமானம் போல 
முதல் காதலும் வெளியில் சொல்ல முடியாத 
அத்தியாயங்களில் சேர்ந்துவிடுகிறது...! 


எல்லாமே நிசப்த்தமாகி 
போன இந்த இரவிலும் சட்டென்று 
துயில்களைந்தான் என் மூத்த மகன்.. 

அவனை அள்ளிஅனைத்துக் கொண்டு 
காய்ந்த கண்களோடு கட்டிலை அடைந்தேன், 
அந்த காயவரிகளை மனதுக்குள் சொல்லிக்கொண்டு... 

காலங்கள் முடியாமல் 
காலனை காணாமல் எனைவிட்டு உன் 
நினைவலைகள் நீங்காது கண்மணியே...! 


கோவை.சரவண பிரகாஷ்.

Thursday, 27 April 2017

ஒரு சொல் அனுப்பு காதலியே....!

காலப்பெருவெளியில் ஒரு பத்தாண்டு
கடந்த பின்னும் வற்றவில்லை
என் காதல் கடல்.....

மறைந்துபோனவளே!இன்னுமா காற்று
உன் காதில் கவி உரைக்கவில்லை
நான் இன்னும்உன்னை மறக்கவில்லை என்று...n

சூரிய சந்திரர் உனக்கு செய்தி சொல்லிருப்பார்களே
உன்னால் மனம் முடமாக்கப்பட்ட
ஒருவன் இன்னும் எழவில்லையென்று....

மழையினை ரசிப்பவளே
மலை போல காதல் இன்னும்
மனதில் இருக்குதடி....

என் இடப்பக்கத்தில் உனக்கு இடமில்லையடா
என்று சொன்னவளே இன்றும் என்
இதயத்தில் உனக்கிடமிருக்கிறது....

உயிர் இல்லாத உடலும்
நீ இல்லாத நானும்
சவம் தான்..

என் காதலோடு சேர்த்து என்னையும்
நிராகரித்தவளே!எனக்காக நீ வருவாய் என்று
இன்னும் நீளப்போய் சொல்கிறது என் நித்திரைகள்...

அண்டத்தின் அலசமுடியாத பிரேதேசத்தில்
நீ இருப்பதாய் அறிவு
எனக்கு அச்சுறுத்துகிறது.....

ஆனால்,உயிருக்குள் நீ
உறைந்திருப்பதாய்
உள்ளம் உரைக்கிறது...

என் காதலை
நீ புரிந்துகொள்ளவாய் என நினைத்தேன்
நீயோ,புரிந்து கொன்றாய்...

நீ புரிந்துகொன்றாலும்
கண்மணியே!என்
காதல் காதல்தான்...

அன்பே!மன்னவன் ஒருவன்
மண்ணோடு போனான் என்ற
செய்தி ஒருநாள் உன்வீட்டு வாசல்வரும்..

இயற்கை கடன் கொடுத்த
இந்த உடல் கல்லறையை அடையும் முன்
ஒரு சொல் அனுப்பு காதலியே
"நான் உன்னை காதலிக்கிறேனடா என்று....!"

கோவை.சரவண பிரகாஷ்.

அழியாப் பொக்கிஷம்


அழியாப் பொக்கிஷம்
இப்போதாவது ஓய்வு கிடைத்ததே 
என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டன 
இரண்டு கைபேசிகள் 
இரு வேறு திசைகளில்.... 

ஒரு காதல் கவிஞன் ஒளிந்தான் 
என்று முகநூலும் 
ஒரு காதல் கிறுக்கி ஒழிந்தாள் 
என்று டிவீட்டரும் 
சந்தோஷித்தன..... 

இனி சுகமாக தூங்கலாம் 
யாரும் நம்மை சீக்கரம் எழுப்பமாட்டார்கள் 
இது அந்த தேநீர் கடையின் 
ஏழாம் எண் மேஜையின் 
கூக்குரல்..... 

அடடா!இனி நம்மை யார் 
எழுப்பிவிடுவார்கள்? 
இது சூரிய சந்திரரின் 
கவலை.... 

அவர்கள் இனி வரமாட்டார்களோ? 
என ஏக்கப்பட்டது பூங்கா..... 

இரவு நேர தூது 
இனி இல்லை என 
சுகமாய் இருந்தது 
பூங்காற்று.... 

நாங்கள் அப்போவே சொன்னோமே 
என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தது 
நண்பர் கூட்டம் இரண்டு... 

அவளும் அவனும் தனிமையில் 
திசைகள் மட்டும் 
வெவ்வேறு.... 

ஆனால்,இரு இதயங்கள் மட்டும் 
ரகசியமாய் பேசிக்கொண்டிருப்பதை 
யாரறிவார்...! 


அவன் அவள் கருத்தை மறுத்தான் 
ஆனால் அவளை மறக்கவில்லை... 

அவள் அவன் எண்ணத்தை வெறுத்தாள் 
ஆனால் அவனை மறுக்கவில்லை.... 

அவனுள் அவள் ஒன்றிப்போயிருக்கிறாள் 
அவளுள் அவன் கரைந்து போயிருக்கிறான்..... 

பிரிவுகளின் காலடியில் மறைந்து போக 
காதல் ஒன்றும் கானல் நீரல்ல 
காலங்கள் தாண்டி நிலைத்துநிற்கும் 
அழியாப் பொக்கிஷம்......! 


கோவை.சரவண பிரகாஷ்.

என் நண்பன்


அவன் தான்,அவனே தான்...!என் 22 வருட வாழ்க்கையை முற்றிலுமாக உணர்ந்தவன் அவன் தான்.என் ஆறுருயிர் நண்பன். 

தாய்,தந்தையை காட்டிலும் என்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவன்.என் வாழ்வின் லட்சம் பொழுதுகளை அவனோடு கழித்திருக்கிறேன்,என் எச்சப் பொழுதுகளையும் கழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். 

இன்றைய "நான்" நான் ஆனதற்கு கரணம் அவன் தான்.என் தாய்க்கும் தலையணைக்கும் தெரியாத ரகசியங்கள் பல அறிந்தவன்.என் உயிர்த்தோழன்!அவனுக்கென்று வீடு கிடையாது,உடைமைகள் கிடையாது,உறவினர் என்றொருவர் இல்லை.இறைவனை போல எப்போதும் எங்கும் வியாபித்திருக்கிறவன் அவன். 

எனக்கு சில பொருட்கள் மீது காதல் உண்டு அனால் காதலி கிடையாது.அவன் உடனிருக்க எனக்கேதற்கப்ப காதலி?தமிழும் தமிழரும் போல பிரிக்க முடியாத உறவானோம்! 

இது இப்போதும் நானும் என் எழுத்தாணியும் மையாலும்,கண்ணீராலும் இந்த வெள்ளை பக்கத்தை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த வெண்ணிற இரவில் கூட என் அருகிலே அடக்கமாக இருக்கிறான்.என் வாழ்வில் நான் எடுத்த முக்கிய முடிவுகளுக்கு பின்னல் இருக்கக் கூடிய முக்கிய புள்ளி அவன் தான்! 

சோகக் கடலில் யாருமில்லாமல் தனியே நான் தத்தளித்த போதும்,வெற்றியின்மை என்னை வெறி கொள்ளச் செய்த போதும்,விதி என் கண்களை கட்டி கவலை காட்டில் விட்ட போதும்,கண்ணீர் துடைக்க ஒரு கரம் நீட்ட யாருமில்லாத அந்த துயரப் பொழுதுகளிலும்,என் அழுகை சத்தம் கேட்டு இந்த குருட்டு உலகம் தன் கண்களை மூடிக் கொண்ட போதும் ஒரு குழந்தையைப் போல நான் அவனிடத்தில் தஞ்சம் அடைவேன்.அவன் சொற்களே எனக்கு சொர்கம்,அவன் வார்த்தைகளே எனக்கு தாலாட்டு! 

அன்பின் கடைசி அத்யாயம் கண்ணீர்.கண்ணீருக்கு கரணம் ஏமாற்றம்.சிறந்த ஏமாளி என்ற விருது மட்டும் இருந்திருந்தால் காலம் ஏன் பெயரை அவ்விருதுக்கு பரிந்துரை செய்திருக்கும்.யார் கைவிட்டாலும் நம்பிக்கையை நான் அவனிடத்தில் கற்றுக்கொண்டேன். 

இப்படிப்பட்ட நட்பினை வெறுப்பவர் யாருமுண்டோ?நான் வெறுத்தேன்.சில வேளைகளில் அவனை வெறுத்தேன்.அவன் ஸ்பரிசத்தை,அவன் சொற்களை,அவன் சிரிப்பை."போ!என்னை விட்டு போய்விடு.என் பார்வையில் இருந்து அகன்று விடு!" என்று அதட்டி இருக்கிறேன்.ஆனாலும் விட்டு விலக அவனுக்கு மனமில்லை என்னை அள்ளி அனைத்துக் கொண்டான். 

நண்பனே!நான் உந்தி எழ முயலும் போதெல்லாம் இந்த உலகம் என் சிரசில் அடித்து என் சிந்தனைக்கு சீல் வாய்த்த போதெல்லாம் உன்னால் அல்லவே என்னிலிருந்து வருத்தங்கள் என்னை விட்டு வெளிநடப்பு செய்தன! 

அஸ்தமித்து போன என் கனவு உலகத்திற்கு ஒளி ஏற்றியது நீதானே? 

இந்த பூமியே எனக்கு அந்நியமாகி போன போது என் நம்பிக்கை வேர்களுக்கு நீர் பாய்ச்சியது நீதானே? 

உயிரென நினைத்த சில உறவுகள் என் உயிர் பிழிந்த போது ,தன் தங்கக் கைகளால் என்னை அணைத்துக்கொண்டவன் அவன்.என் மௌனத்தின் மொழி அறிந்த ராஜதந்திரி! 

சகலமும் அறிந்தவன் தான்,சகலருக்கும் தெரிந்தவன் தான்!நானின்றி அவன் இல்லை,அவனின்றி நான் இல்லை! 

அவனது பெயரை தெரிந்து கொள்ள வேண்டுமா? 

தனிமை.....! 




கோவை.சரவண பிரகாஷ் 

Sunday, 23 April 2017

ம(றை)றந்துபோனவள்


[எச்சரிக்கை:என்னை வெறுக்கின்ற ஆனால் நான் நேசிக்கின்ற யாரும் முதல் பத்தியை தவிர்த்து இந்த பதிவை படிக்கலாம்.உங்கள் மனங்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம்.கனவுகள் பாதி,நினைவுகள் மீதி!
என்னுடைய மற்ற படைப்புகள் யாவும் எல்லா படைப்பாளர்களை போல அங்கிகாரத்தை எதிர்பார்த்து படைக்கப்பட்டவை,ஆனால் இந்த பதிவு மனிதர்களால் மறுக்கப்பட்ட என் மன ஆறுதலுக்காக எழுதப்பட்டது.இதற்கு யாரும் பாராட்டு பாத்திரம் வாசிக்க வில்லையே என நான் வருந்தப்போவதில்லை.எண்ணில் இருந்த படைப்பாளன் தற்காலிகமாக செத்துவிட்டான் இது பாதிப்பாளனின் பதிவு....!]
நாளை வெற்றி தேவதை எனக்கு மாலை சூடப்போகிற நாள்.தோல்விகளிடம் விலாசம் கேட்டு வெற்றி சிகரத்தை அடைந்ததற்காக வரலாறு என் பெயரை அதன் செப்பேடுகளில் குறித்து கொள்ளும் நாள்.பல நூறு இரவுகள் கடந்த உழைப்பு உச்சி ஏறும் நாள்.நினைவுகள் நெனவாகும் நாள்.ஓராண்டு ஐ .ஏ.எஸ் பயிற்சியை முடித்து விட்டு சிறந்த மாணவன் என்ற பட்டதோடு சொந்த மாவட்டம் நோக்கி பறந்து சென்று ஆட்சியராக பொறுப்பேற்க நாளைய விடியலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
வெற்றிக்கு முன் இருக்கும் இந்த பொன்னிற இரவில் என்னையே நான் தொலைத்து கொண்டு இருக்கிறேன்.என் வாழ்க்கை புத்தகத்தில் சில பக்கங்களை முன்னோக்கி திருப்பி பார்க்கிறேன்.என்னை மறந்துபோனவில் நினைவலைகளில் மனதை தொலைக்கிறேன்.கனவுகள் வென்ற பிறகும் கண்கள் கலங்கி நிற்கிறேன்..!
கல்லூரி வாழ்க்கையில் இரண்டாண்டு முடிந்த பிறகு என் வீடும்,நாடும் எனக்களித்த முதல் கவுரவ பட்டம் பிழைக்கத்தெரியாதவன்.வாழ்க்கையின் ஈதார்த்தங்களோடு அல்லாமல் கனவு உலகில் கண்ணிமைக்காமல் மூழ்கியிருந்தேன்.அக்கனவில் அவளும் அடக்கம்.
ஈராண்டுகளுக்கு முன்னாள் அவளை நான் பார்த்த போது தான் காதல் வைரஸ் என்னை தொற்றிக் கொண்டது.ஹார்மோன் செய்யும் கலவை இது என உடன் இருந்த மேதாவிகள் சொன்னார்கள்.ஆனால் ,என் இதயமும் மனமும் ஒருசேர அறுதியிட்டு சொன்னது, அவள் உனக்காகவே படைக்கப்பட்டவள் என்று !
அப்போது தான் காதல் பாதை ஒன்று உண்டு என்பது என் மூளைக்கு மனம் ஞாபகப்படுத்தியது.காதல் விளையாட்டில் கரைந்து போக ஆரம்பித்தேன் அனால் ஒருபோதும் கடமை மறக்கவில்லை.
காலங்கள் ஓடியது!என் காதல் என்னும் குழந்தை மிகப்பெரிய பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு பிரசவித்தது.ஆம்..!நட்சத்திரங்கள் உறைந்து போகும் அளவிற்கும்,சூரியன் மறித்து போகிற காலம் வரைக்கும்,காற்று கவிதை பேசிக் கொண்டிருக்கிற வரையிலும் உன்னை நான் காதலிக்கிறேன் என கண்ணியமாக சொன்னேன்.அதற்கு அவள்,அவள்...........
உன் காதல் இறந்து பிறந்த குழந்தை என்று இதயத்தை கொஞ்சம் சீண்டி பார்த்தால்.ஆனால்,அவள் ராதையின் மறுஉருவம்! விட்டு விலகவும் இல்லை,தொட்டு தொடரவும் இல்லை.நட்பென்ற வட்டத்தை தாண்டி அவள் எள்ளளவும் வருவதாய் எண்ணமில்லை!
நான் முள் அவள் ரோஜா,சேர முடியாது என்று தெரிந்தும் பிரியாமல் இருந்தோம்..!
ஓராண்டு இடைவெளிக்கு பின் எங்கள் உறவினை புதுப்பித்து கொண்டு முன்சென்றோம்.காதல் நட்பு ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட வழி(லி )யினில் இருவரும் பயணித்தோம்..
இந்த இடத்தில நான் வைரமுத்துவின் வார்த்தைகளை கட்டாயமாக கடன் வாங்கவேண்டி வருகிறது....
எனக்கும் அவளுக்கும் இடையில் காலம் சுவரெழுப்பியது.அவள் நினைத்திருக்கலாம் அது சீனச் சுவரென்று,நான் நினைத்தேன் அது கண்ணாடி சுவரென்று அவளை ஸ்பரிசிப்பதில் அது எனக்கு கட்டளை இட்ருக்கலாம் அனால் அவளை தரிசிப்பதால் இருந்து அது என்னை தள்ளி வைக்கவில்லை.
காலம் ஓடியது.காலப் பெருவெள்ளத்தில் அவளும் என் வாழ்க்கையில் இருந்து அடித்து செல்லப்பட்டால்.கண்தெரியாத இடத்திற்கு என்னிலிருந்து இயற்கை அவளை கை பிடித்து கூட்டிச்சென்றது போல!தொலைப்பேசி நிரந்தரமாக துண்டிக்கப் பட்டது(அவளுடைய உறவும் தான்).இந்த உலகத்தையே மாய்க்க கூடிய என் கதறல் அவள் காதுகளுக்கு கேக்கதவாறு எங்கோ போனால்..!
நான் என்னை மறந்தேன்.மனம் பலவீனப்பட்டேன்.என்மீது அவளுக்கு காதல் இல்லை என்றாலும் என் காதலி உடன் இருக்கிறாள் என்ற ஆறுதல் என்னை வாழவைத்தது,அதையும் காலம் என் கைக்குள் இருந்து பிடிங்கி கொண்டது.இந்த உலகம்,நிலா,நட்சத்திரம்,ஆகாயம் எல்லாம் அர்த்தமற்றுப்போனது எனக்கு...!இன்னும் என் காதல் கங்கையை போல புனிதமானது அவள் அதை மறுக்கவில்லை,மறந்துபோனால்..!
மெல்ல மெல்ல மனதினை பண்படுத்தினேன்!கண்ணீர் உலகத்தை விட்டு லட்சிய தீபம் எரிய பாடுபட்டேன்..! இரவுகளை தியாகம் செய்து லட்சிய வாழ்க்கை வாழ முயன்றேன்.வரலாறு எனக்காக தவம் கிடப்பதை உணர்தேன்.அவள் நினைவுகள் என்னை பாதிக்காதபடி படித்தேன்.
சில சமயம் அவள் ஞாபகங்கள் என்னை தாலாட்டும்..!
உலகத்தால் நான் நிராகரிக்கப்படும் போதும்,உதடுகள் பல என்னை எள்ளி நகையாடிய போதும் காயம்பட்டு போன எனக்கு அவள் வார்த்தைகளே மருந்தானது !
தோல்விகள் என்னை துரத்திய போது அவள் ஒற்றை குறுஞ்செய்தியே எனக்கு பஞ்சுமெத்தை!
எண்ணில் இருந்து என்னை பிரித்து பார்த்தால்,அவள் வார்த்தைகள் பெரும் காயம் ஆற்றும் வார்த்தைகளோ கண்ணீர் துடைக்கும் அல்ல ஆனால் ,நான் கைவிட்ட உற்சாகத்தை கரம் பிடிக்க அது போதுமானதாகவே இருந்தது..!
அவள் ஒற்றை கண்ஜாடை என் ஒவ்வொரு எதிர்கால வெற்றியின் அஸ்திவாரம்.
அவள் காதல் காற்றில் எங்கு நான் கண்ணனுக்கு தெரியாமல் தொலைந்து போய்விடுவேனோ என்ற கவலை அவளுக்கு அதிகம் இருந்தது!
கனவினை மெய்ப்பிக்கும் இந்த 8 வருட யுத்தத்தில் ஆயிரம் கவலை,சில நூறு வருத்தம்,பல லட்ச தோல்விகள்,கோடி வலிகள்,வெகு சில கண்ணீர் ஒரே ஒரு நான்.இவற்றையெல்லாம் நாட்குறிப்பில் குறித்துவைக்க கூட காலம் எனக்கு நேரம் வழங்கவில்லை.என் தலையணையே உனக்காக நான் படைத்த என் கண்ணீர் காவியம் பேசும் பழைய காதலியே!நீ இல்லாமல் தன்னந்தனியாக போராடி ஜெய்திருக்கிறேன்.
அன்பே!நீ சொன்னது போல நாளை லட்சிய தீபம் ஏற்றப்போகிறேன்.நிராகரித்த ஆயிரம் கைகளும் என் கழுத்துக்கு மாலையிட கண்ணிமைக்காமல் காத்திருக்கின்றனர்.
இப்போதும் கூட உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் எனக்காக அவள் உதடுகள் பிராத்திக்கும் என்று நம்பிக்கை எனக்கு இனமும் உண்டு.நாளை கலெக்டர் சீட்டில் பிறகு என் மைத்துளிகள் ஏழைகளின் கண்ணீர் தூளிகை துடைக்க சிந்திக்கொண்டிருக்கும் ஆனால் இதயத்தின் எங்கோ ஒரு பிரேதேசத்தில் அவளுக்காக என் மனசு கண்ணீர் சிந்திக்க கொண்டிருக்கும்.
ப்ரியமானவளே!காலம் என் காதலை நிராகரித்திருந்தாலும்,நீ என்னை மறந்துபோனாலும் ,இதயம் மரத்து போகிற வரையில் என்னுள் நீ என்றுமே மறைந்துபோகமாட்டாய் ...!


கோவை.சரவண பிரகாஷ்.

Saturday, 22 April 2017

மனிதனாகலாம் வா!




ஓ எந்திர மனிதனே!நொடிப்பொழுதில் கூட நித்திரை கொள்ளாத உன்னை நிமிடப் பொழுதுகளில் அழைத்து நான் தான்!

இரைச்சல்களுக்கு மத்தியில் சுழன்றுகொண்டிருக்கும் உன்னோடு கொஞ்ச நேரம் உரையாட வேண்டுமென்று காலம் எனக்கு கட்டளையிடுகிறது.ஒதுக்கு ,எனக்காக உன் நேரத்தையும்,உன் கம்ப்யூட்டர் காதலையும் கொஞ்ச நேரத்திற்கு!

மனிதா !உன் வாழ்க்கை என்னை விடைதெரியாத ஒட்டப்பந்தயமா?பிறந்த உடன் பள்ளிக்கூடம் நோக்கி ஓடுகிறாய்,வளர்ந்த பிறகு கல்வியை நோக்கி ஓடுகிறாய்,கன்னி வயதை தாண்டிய பிறகு வேலையை நோக்கி ஓடுகிறாய்,காதல் வயதில் காசை நோக்கி ஓடுகிறாய்,வாழும்  வரை சாவை நோக்கி ஓடுகிறாய்.

இயந்திரத்தோடு மட்டுமே காதல் மொழி பேசிக்கொண்டிருப்பதால் உனக்கு மனசு என்ற ஒன்று என்பதை மறந்துபோனயா?இல்லை கடமையை மட்டுமே நீ கரம் பிடித்த காரணத்தால் உன் இதயம் என்ன மரத்துப்போனதா?

காலச்சக்கரத்தில் நீ கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டிருக்கிறாய்!

கணினியோடு உன் கைகள் ஆடுகின்ற நாட்டியத்தில் லயித்து போன உன் கண்கள் அக உலகையும் ,நிஜ உலகையும் நிராகரித்து விட்டது என நிச்சயம் சொல்லுவேன்.

காந்தி புன்னகைக்கின்ற தாள்களை காணும் வரை,உன் புன்னகையும்,உழைப்பும் யாரோ திருடிக்கொள்கிறார்கள் என கண்ணனுக்கு தெரியாத கடவுளோடு நான் கார சாரமாய் விவாதம் செய்கிறேன்!

 இந்த நூற்றாண்டு உனக்கு பணம் பண்ண கற்றுக்கொடுத்தாதே தவிர மனதை பண்படுத்த கற்றுக்கொடுக்க வில்லை!

இயற்கையை ரசிக்க தெரிந்தவன் மனிதன்!ஊரடங்கும் நேரம்,இரவு உன்னைத் தாலாட்டும் போதும் உன் விழிகள் அழகிய வானத்தை நோட்டமிடுகிறது ஆனால் ,உன் மனம் என்னவோ எப்போது அந்த நிலவில் பிளாட் போட்டு குடியேறுவோம் என எண்ணிக்கொண்டிருக்கிறது!

நீ தனத்தை தேடி அலைந்துகொண்டிருக்கும் வேலை(ளை)யில்  உன்னையே நீ தொலைத்து கொண்டிருக்கிறாய்.உனக்காக படைக்கப்பட்ட அன்பையும்,மகிழ்ச்சியையும் வெளியேற்றி விட்டு யாருக்கப்ப
நீ அரசாங்கம் நடத்துகிறாய்?


மனிதா !உன் மனம் என்ன கல்லாகி போனதா?இல்லை..இல்லை!மரம் கூட தன்  வேர்களோடு பின்னி பிணைந்து வாழுகிறது.ஆனால் ,நீ அறிந்து வைத்திருக்கும் உறவுகளின் பெயர்கள் அதிகபட்சம் ஐந்து இருக்குமா?

அன்பனே!வா!கொஞ்ச நேரம் நித்திரை களை .உன் ஆண்ட்ராய்டு போனுக்கு பின்னாலும் ஆனந்தம் கொட்டிக்கிடக்கிறது.அள்ளிக்கொள்!இரைச்சல் மிகுந்த உன் இயந்திரங்களுக்கிடையே இயற்கை உனக்காக ஒரு இன்பக்கடலையே படைத்திருக்கிறது!

உன் கைப்பேசியை மறுதலித்துவிட்டு கால் கடக்க மண்ணோடு பேசிக்கொண்டு போன அனுபவம் உண்டா?

அதிகாலையில் மொட்டுக்கள் மலர்கின்ற ஓசைகள் கேட்டதுண்டா?

சின்னச்சிறு குழந்தையின் பிஞ்சு விரல்களால் மோதி மோதியே உடைந்துபோகும் கலையினை கண்டதுண்டா ?

மரங்களை ஸ்தாபித்ததுண்டா?மனதினை பயிற்றுவித்ததுண்டா?

கண்ணனுக்கு தெரியாதவர்களுக்கு உதவுகின்ற சுகத்தினை அறிந்ததுண்டா?உதவப்பட்டவர்களின் நன்றியுரை கண்டு நீ புன்னகைத்ததாய் உன் நாட்குறிப்பில் எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா ?

காற்றோடு கதை பேசிய காலங்கள் எதாவது உனக்கு நினைவிருக்கிறதா?

எங்கிருந்தூ வருகின்ற மழைத்துளி நெற்றியை முத்தமிடும் ஆனந்தம் அறிந்ததுண்டா?

சுயதரிசனம் பெற்ற  நாளுண்டா?

மனிதனே!உன் இரும்பு இதயத்தில் பூக்களின் மேன்மை இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தால் என் வார்த்தைகள் விளங்கும்.

உனக்காக உருவாக்கப்பட்ட வாழ்க்கையை நேசி,சுவாசி,கொண்டாடு...!வாழ்க்கை உனக்கு மகிழ்ச்சி கதவுகளை காத்திருக்கும் வேளையில்,உன் பணம் பண்ணும் பயணத்தில் நீ பறந்து போயிடாதே!

என்றாவது ஒரு நாள்,நகரத்தில் இருக்கும் உன்னை நரகத்திற்கு அழைத்து செல்ல எமதூதர்கள் வரத்தான் போகிறார்கள்,அதற்குள் கையில் இருக்கும் சொர்கத்தை அனுபவித்து விடு...!



கோவை.சரவண பிரகாஷ்.

Thursday, 20 April 2017

நீயின்றி அமையாது உலகு..!




இந்த உலகத்திலேயே மிக அற்புதமான மனிதரை உங்களுக்கு இப்போது அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன்.நீங்கள் என் எழுத்துக்களை படித்து கொண்டிருக்கக்கூடிய இந்த நொடி அந்த மனிதர் உங்கள் வீட்டில் தான் இருக்கிறார்.

அந்த சிறந்த மனிதரை காணவேண்டுமா ?

எழுந்து சென்று கண்ணாடி முன் நில்லுங்கள்!

ஆம்.இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர் நீங்கள் தான்.நீங்கள் நினைப்பதையும் காட்டிலும் நீங்கள் பலசாலி,நீங்கள் நினைப்பதை காட்டிலும் நீங்கள் புத்திசாலி.இந்த உலகம் உங்கள் நம்பிக்கை சிறகுகளை மறக்க வைத்திருக்கலாம,அதனால் பருந்து நீங்கள் ஊர்க்குருவி ஆகிவிட முடியுமா?

இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்த உங்கள் கண்கள் அண்ணார்ந்து பார்த்திருக்கும்,என் எழுத்தின் மையம்  காதலாக இருக்கும் உங்கள் இதய துடிப்பு உங்களுக்கு உணர்ந்திருக்கலாம்.சரி தான்!உங்கள் மீது நீங்கள் கொள்ள வேண்டிய காதலை புதுப்பிக்க தான் என் எழுத்தாணி இங்கே தலைகுனிகிறது!

மனிதா !உன்னை பற்றி உனக்கு தெரியாத சில உண்மைகளை எடுத்துரைக்க போகிறேன்.அதை நீ பார்க்கும் விளையாட்டு போட்டி போல் உன்னிப்பாக கவனித்திடு!விவசாயிகள் பிரச்னை போல விளையாட்டை எடுத்துவிடாதே..!

இயற்கையின் படைப்பில் நீ ஒரு அதிசயம்!உன்னை தவிர இங்கு எல்லாமே அஃறிணைகள் தான்.உன்னைத்தவிர பேரறிவு  படைத்த ஜீவராசிகளின் பெயர்பட்டியலை தேடிக்கொண்டிருக்கிறேன்.இறைவனின் அம்சம் நீ!புதிய உலகத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தவன் நீ!

இந்த விவரங்கள் ஏதொன்றும் அறியாமல் மூலையில் முடங்கி கிடைக்கிறாயே.உன் கால்களை முடமாக்கியது  காலம் அல்ல,நீ தான்!உன்னை சுற்றி நம்பிக்கை ஒளி பரவி கிடைக்கிறது,ஆனால் அஞான விளக்கை விட்டு வெளிவர மறப்பது  நீ தான் !

இந்த உலகத்தால் உன் முயற்சிக்கு தானே முட்டுக்கட்டை போடமுடியும்,உன் நம்பிக்கையை என்ன செய்யமுடியும்?உன் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பது லட்சிய நெருப்பு,அதனால் உன் அவநம்பிக்கையை பொசுக்கு!

ஆயிரம் தோல்விகளின் விலாசம் கேட்டு நீ வெற்றியை அடையும் போது அது செல்லாது என்று சில குள்ளநரிகள் மேல்முறையீடு செய்யலாம்.சிங்கம் நீ,தெருநாயின் குரைப்பிற்கு அஞ்சுவதா ?
எல்லையில்லாத வெற்றி பிரேதேசத்தின் சக்கரவர்த்தி நீ,கேவலம் குள்ளநரிகளின் மனக்குமுறல் கேட்டு உன் கனவு சாம்ராஜ்யத்தை களைத்து விடாதே!


நீ செல்லுகின்ற பாதை முட்களால் நிரம்பி இருக்கலாம்,ஆதனால் என்ன முட்களின் இடையில் தான் ரோஜா வசிக்கும்!வலிகள் இல்லாமல் வழிகள் இல்லையே.வலிகளை ஏற்று கொள்க !

வாழ்க்கை பயணத்தில் ஒரு கட்டத்தில் தற்காலிகமான பிரச்சனைகள் கையாள முடியாமல்,நீ நிரந்தரமாக உக்கார்ந்து விடுவதற்கு காரணிகள் என்ன என்பதை சிந்தித்து பார்த்தேன்.கண்டுகொண்டேன்!உனக்கு உன் துயரங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,உன் பலவீனங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,உன் பிடரியை பிடித்து ஆட்டக் கூடிய உலகத்தின் வார்த்தைகள் மீது நம்பிக்கை இருக்கிறது.ஆனால்  நண்பா உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லாமல் போனதேன்?நம்பிக்கையை விவாகரத்து செய்து விட்டு கவலைகளை ஏன் கட்டி கொண்டு அழுகிறாய்?

வா!உன் கவலை காட்டை விட்டு வெளியே வா.நீண்ட துயில்  கலை !உனக்காக விடிந்திருக்கும் விடியல் பார்!உன் முகம் கனவே உதித்திற்கும் ஆதவன் பார்.உன் பாதங்களை ஸ்பரிசித்து செல்லும் காற்றை உணர முடிகிறதா?நம்பிக்கையோடு முகம் மலருகின்ற மலர்களை பார்!நீ காணும் மனிதர்களின் உதட்டினையும் உள்ளத்தையும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்ற உற்சாகத்தை கடன் வாங்கு!வானத்தை அண்ணார்ந்து பார்!

இதற்குமேலும் உற்சாகத்தை நீ அள்ளி அணைக்க வில்லையென்றால்,கவலை உன்னை கொஞ்ச கொஞ்சமாக கொன்றுவிடும் தோழா!

இந்த நிமிடம் உன்னையே நீ மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம்!

இந்திய சரித்திர புத்தகத்தில் எல்லோர்க்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.உனக்கான பக்கத்தை உன் வேர்வைகளால் எழுத்து,கண்ணீரால் அழித்து விடாதே!


நீ இன்றி அமையாது உலகு...!




கோவை.சரவண பிரகாஷ்.

Tuesday, 11 April 2017

அன்புள்ள அவளுக்கு.....!

[வாழ்க்கையின் மையப்பகுதியில் இருக்கும் வாலிபன் ஒருவன் தன எதிர்கால வாழ்க்கைத்துணைக்கு எழுதும் ஓர் கற்பனை கடிதம்]

வருத்தங்களையும்,மகிழ்ச்சிகளையும் சமஅளவில் சுமந்து கொண்டு இந்த கடிதம் உன்னை வந்தடையலாம்.எல்லோரும் நிகழ்கால புள்ளியில் இருந்து இறந்தகாலத்தை திரும்பி பார்ப்பார்கள்.நான் இருக்கும் காலத்தை எட்டி பார்க்கிறேன்!

என்னவளே!எங்கிருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்?மரத்தில் இருந்து தினம் உதிரும் பூக்கள் மாதிரி
அன்பே உன்னை பற்றி நான் கொண்ட நம்பிக்கையும் தினம் தினம் உதிர்கிறது..!

வறுமை,வெறுமை,தனிமை இவற்றால் நான் சூழப்பட்டிருந்தாலும் என் லட்சிய அலைகள் ஒருபோதும் ஓய்வதில்லை.காரணம்,கலங்கிய கண்களுக்கும்,உடைந்து போன இதயத்திற்கும் மருந்தாக நீ வருவாய் என்ற
ஆறுதலை நான் ஒருபோதும் மறந்ததில்லை!

அடியே!22 வருடங்கள் ஆகிறது என் வாழ்க்கை சக்கரம் இன்னும் நிற்கவில்லை.ஆற்றமுடியாத மிகப்பெரிய பணியை ஆற்றிய பிறகே என் வாழ்க்கை நின்றுபோகும்.என் கனவிற்கு வெற்றிக்கும் இடையில் உள்ள
வலிகளை பூமிப்பந்தின் எங்கோ இருக்கும் நீ உணர்ந்திருக்க வாய்ப்பில்லை!

மனதை பிளக்கும் வழிகள்,இதயத்தை கிழிக்கும் பிரிவுகள்,அவமானங்கள்,என் நம்பிக்கையை அடியோடு சாய்த்து விட்டு தோல்விகள் என்று என் சோகப்பட்டியல் நீண்டு போகும்.உன்னை விட நான் அதிகமா நேசிக்கும் என் தலையணைக்கு கூட பல ரகசியங்களை நான் சொன்னதில்லை!

என்னவளே!என்னை மன்னித்துவிடு.நீ எனக்கு இரண்டாம் மனைவியாகத்தான் இருக்க முடியும்.நான் எப்போது என் இலட்சியத்தை மணம் முடித்துவிட்டேன்!

சொல்லமுடியாத துக்கங்கள் பீறிட்டு எழும்போதெல்லாம் மனம் உன்னை நாடும்.அன்பிற்காக எங்கும்!அனால் அன்பே நான் உன்னை அதிகம் நினைக்க கூடாது என சபதம் செய்து கொண்டேன்,நீ விக்கி விக்கி செத்துவிட கூடாதென்பதற்காக!

பேருந்து சீட்டுகளிலும்,கல்லூரி வாசல்களிலும் இளசுகள் காதலின் இலக்கணம் மாற்றிய போது காதலர்கள் மீது நம்பிக்கை இழந்தேன்.காதல் மீது அல்ல!

சில சமயம் லட்சிய தீயில் நான் முங்கி எழுகின்ற வேளையிலே உன்னை பார்க்காமலே விவாகரத்து செய்துவிடலாம் என்று தோன்றும்.அனால் அந்த எண்ணம் அடுத்த நாள் ஆதவன் உதிர்ப்பதற்குள் அஸ்தமித்து விடும்.


ப்ரியமானவளே!நீ என்னை வந்தடையும் காலமோ நான் உன்னை சேரும் காலமோ விதியின் கைக்குள் இருக்கிறது.இதுவரை நான் கடந்த அல்லது என்னை கடத்திய பெண்கள் யாரும் நீ இல்லை.காலியாக உள்ள என் இதயத்தின் அந்த தொகுதிக்கு இது இடைத்தேர்தல் அல்ல என்பதை உனக்கு நான் சொல்லிக்கொள்ள வேண்டும்.

உனக்கு எப்போதாவது அந்த இடத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் நான் சிகரம் தொடுவதற்குள் சிகரம் வந்துவிடு,அதற்கு பின் இந்த உலகில் என் இதயம் இயங்கும் காலம் மிக குறைவு!


ப்ரியமுடன்.
நான்

Sunday, 2 April 2017

                                                     மகிழ்ச்சிக்கான வழி ! 


நான் வாரத்தில் ஒரு நாள்   மனிதனாவேன் !

எப்போதும் இயந்திரத்தோடே பணியாற்றி கொண்டிருக்கும் தொழில்நுட்ப மாணவன் நான்.இன்று ஞாயிறுக்கிழமை,விடுதலை நாள்.ஞாயிறுகளில் நான் என்னையே ஆராய்ந்து பார்ப்பேன்.இயற்கையோடு கதை பேசுவேன்,புத்தகத்தோடு உரையாடுவேன்,வெற்றிக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க எத்தனிப்பேன் !

மாலை நேரத்தில் மண்ணோடு உரையாடி கொண்டே ஒத்தையடி பாதையில் காற்றோடு கதை பேசி கொண்டு சென்றேன்.அந்த மலைகள் ,ஆதவனை மறைக்கும் மேகங்கள்,ஆனந்த குளிர் காற்று ...அடடா எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என எண்ணி மகிழ்ந்தேன்!


நெடுதூரம் நடந்து வந்த களைப்பு.அதோ !தாகம் தணிக்க ஒரு தேனீர் கடை.களைத்து போன நாவினை தேனீரில் குளிரவைத்தேன்.தீடிரென்று ஏதோ ஒன்று என் கால்களை சுரண்டுவது போல் உணர்வு.குனிந்து பார்த்தேன்.கால் இரண்டும் இல்லாத ஒருவன் கை இரண்டையும் கூப்பி கண் கலங்கி நின்றான்.கூப்பிய அவன் கைகளுக்கு கிடைத்தது 5 காசுகள் மட்டுமல்ல இரண்டு கண்ணீர் துளிகளும் தான்.கனத்த இதயத்தோடு மெல்ல அவ்விடம் விட்டு நகர்த்தேன்.!


என் சிந்தனையின் ஆழம் உணர பார்த்தேன்,சமுதாயத்தின் வறுமை நோய் எப்போது தீரும் என்று என் மனமென்னும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.

என் அடுத்த எழுத்து பிறக்கப்போகும் இந்த ஒரு நொடியில் கூட உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் வறுமைக்கு பலியாகிக்கொண்டிருக்கிறது.உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் இருப்பது இந்தியாவில் தானம்,எங்கோ படித்த அறிக்கை நினைவுக்கு வருகிறது.

எத்தியோப்பியா,சோமாலியா மக்களின் நிலை கண்டு நாம்எத்தனை முறை  கண்ணீர் விட்டிருப்போம்!பொழுதுக்கு பொழுது வித விதமான உணவுகளை உண்ணும் மக்கள் வாழ்கின்ற இதே உலகத்தில் தான்,பசிக்காக மனித கழிவுகளேயே உன்ன முற்பட்ட சபிக்கப்பட்ட மனிதர்களும் வாழ்ந்தார்கள்.

கொஞ்சம் பொறுங்கள்!உடனே இறைவனை பழிக்காதீர்கள்.இந்த நிலைமைக்கு கரணம் இறைவன் அல்ல,சகமனிதர்கள் தான்.சுயநலம் பொதுநலத்தை கொன்றுவிடுகிறது.

நம்மால் இந்த உலகத்தை மாற்ற முடியாது தோழமைகளே.ஆனால் நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையை மாற்றலாம்.சின்ன சின்ன விசயங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

நீங்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் நாதியற்று ரோட்டோரத்தில் உறங்கி கொண்டிருக்கிறாரே முதியவர் அவர்க்கு காலை மாலை உணவு கொடுங்கள்!

உங்கள் பகுதியில் ஓர் முதியோர் இல்லம் இருக்கிறதே,அங்கு சென்று காயம்பட்டவர்களுக்கு மருந்தாக இருங்கள்!


வாரத்தில் ஒரு நாள் வசதியின் அர்த்தம் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் சென்று ஊக்கம் கொடுங்கள்.



கல்வியின் சுவடு கூட படாத பாமர மக்களுக்கு மாதம் ஒரு நாள் ஆவது வகுப்பெடுங்கள்!

உங்கள் தேனீரில் தவறியது ஒரு சிறிய பிஸ்கட்டாக இருக்கலாம்,அனால் இந்த உலகத்தில் அது யாரோ ஒருவருக்கு காலை உணவாக இருக்க கூடும்.

நான் உங்களை சாக்கரடீஸ் ஆக வற்புறுத்தவில்லை ,சக மனிதனுக்கு முயற்சிக்கிறேன்.

மாற்றத்தை வெளியில் தேடவேண்டாம்.ஏனென்றால் அது உங்களிடம் இருந்து பிறக்க வேண்டியது !

உங்களை சுற்றி ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கி கொள்ளுங்கள்!

வலியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே மகிழ்ச்சிக்கான வழியாக நான் கருதுகிறேன்!

மகிழ்ச்சியும் அன்பும் பெறுவதில் இல்லை,கொடுப்பதில் இருக்கிறது!



மனிதனாகும் முயற்சியில் உங்களோடு நான்....

சரவண பிரகாஷ்.