ஓ எந்திர மனிதனே!நொடிப்பொழுதில் கூட நித்திரை கொள்ளாத உன்னை நிமிடப் பொழுதுகளில் அழைத்து நான் தான்!
இரைச்சல்களுக்கு மத்தியில் சுழன்றுகொண்டிருக்கும் உன்னோடு கொஞ்ச நேரம் உரையாட வேண்டுமென்று காலம் எனக்கு கட்டளையிடுகிறது.ஒதுக்கு ,எனக்காக உன் நேரத்தையும்,உன் கம்ப்யூட்டர் காதலையும் கொஞ்ச நேரத்திற்கு!
மனிதா !உன் வாழ்க்கை என்னை விடைதெரியாத ஒட்டப்பந்தயமா?பிறந்த உடன் பள்ளிக்கூடம் நோக்கி ஓடுகிறாய்,வளர்ந்த பிறகு கல்வியை நோக்கி ஓடுகிறாய்,கன்னி வயதை தாண்டிய பிறகு வேலையை நோக்கி ஓடுகிறாய்,காதல் வயதில் காசை நோக்கி ஓடுகிறாய்,வாழும் வரை சாவை நோக்கி ஓடுகிறாய்.
இயந்திரத்தோடு மட்டுமே காதல் மொழி பேசிக்கொண்டிருப்பதால் உனக்கு மனசு என்ற ஒன்று என்பதை மறந்துபோனயா?இல்லை கடமையை மட்டுமே நீ கரம் பிடித்த காரணத்தால் உன் இதயம் என்ன மரத்துப்போனதா?
காலச்சக்கரத்தில் நீ கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டிருக்கிறாய்!
கணினியோடு உன் கைகள் ஆடுகின்ற நாட்டியத்தில் லயித்து போன உன் கண்கள் அக உலகையும் ,நிஜ உலகையும் நிராகரித்து விட்டது என நிச்சயம் சொல்லுவேன்.
காந்தி புன்னகைக்கின்ற தாள்களை காணும் வரை,உன் புன்னகையும்,உழைப்பும் யாரோ திருடிக்கொள்கிறார்கள் என கண்ணனுக்கு தெரியாத கடவுளோடு நான் கார சாரமாய் விவாதம் செய்கிறேன்!
இந்த நூற்றாண்டு உனக்கு பணம் பண்ண கற்றுக்கொடுத்தாதே தவிர மனதை பண்படுத்த கற்றுக்கொடுக்க வில்லை!
இயற்கையை ரசிக்க தெரிந்தவன் மனிதன்!ஊரடங்கும் நேரம்,இரவு உன்னைத் தாலாட்டும் போதும் உன் விழிகள் அழகிய வானத்தை நோட்டமிடுகிறது ஆனால் ,உன் மனம் என்னவோ எப்போது அந்த நிலவில் பிளாட் போட்டு குடியேறுவோம் என எண்ணிக்கொண்டிருக்கிறது!
நீ தனத்தை தேடி அலைந்துகொண்டிருக்கும் வேலை(ளை)யில் உன்னையே நீ தொலைத்து கொண்டிருக்கிறாய்.உனக்காக படைக்கப்பட்ட அன்பையும்,மகிழ்ச்சியையும் வெளியேற்றி விட்டு யாருக்கப்ப
நீ அரசாங்கம் நடத்துகிறாய்?
மனிதா !உன் மனம் என்ன கல்லாகி போனதா?இல்லை..இல்லை!மரம் கூட தன் வேர்களோடு பின்னி பிணைந்து வாழுகிறது.ஆனால் ,நீ அறிந்து வைத்திருக்கும் உறவுகளின் பெயர்கள் அதிகபட்சம் ஐந்து இருக்குமா?
அன்பனே!வா!கொஞ்ச நேரம் நித்திரை களை .உன் ஆண்ட்ராய்டு போனுக்கு பின்னாலும் ஆனந்தம் கொட்டிக்கிடக்கிறது.அள்ளிக்கொள்!இரைச்சல் மிகுந்த உன் இயந்திரங்களுக்கிடையே இயற்கை உனக்காக ஒரு இன்பக்கடலையே படைத்திருக்கிறது!
உன் கைப்பேசியை மறுதலித்துவிட்டு கால் கடக்க மண்ணோடு பேசிக்கொண்டு போன அனுபவம் உண்டா?
அதிகாலையில் மொட்டுக்கள் மலர்கின்ற ஓசைகள் கேட்டதுண்டா?
சின்னச்சிறு குழந்தையின் பிஞ்சு விரல்களால் மோதி மோதியே உடைந்துபோகும் கலையினை கண்டதுண்டா ?
மரங்களை ஸ்தாபித்ததுண்டா?மனதினை பயிற்றுவித்ததுண்டா?
கண்ணனுக்கு தெரியாதவர்களுக்கு உதவுகின்ற சுகத்தினை அறிந்ததுண்டா?உதவப்பட்டவர்களின் நன்றியுரை கண்டு நீ புன்னகைத்ததாய் உன் நாட்குறிப்பில் எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா ?
காற்றோடு கதை பேசிய காலங்கள் எதாவது உனக்கு நினைவிருக்கிறதா?
எங்கிருந்தூ வருகின்ற மழைத்துளி நெற்றியை முத்தமிடும் ஆனந்தம் அறிந்ததுண்டா?
சுயதரிசனம் பெற்ற நாளுண்டா?
மனிதனே!உன் இரும்பு இதயத்தில் பூக்களின் மேன்மை இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தால் என் வார்த்தைகள் விளங்கும்.
உனக்காக உருவாக்கப்பட்ட வாழ்க்கையை நேசி,சுவாசி,கொண்டாடு...!வாழ்க்கை உனக்கு மகிழ்ச்சி கதவுகளை காத்திருக்கும் வேளையில்,உன் பணம் பண்ணும் பயணத்தில் நீ பறந்து போயிடாதே!
என்றாவது ஒரு நாள்,நகரத்தில் இருக்கும் உன்னை நரகத்திற்கு அழைத்து செல்ல எமதூதர்கள் வரத்தான் போகிறார்கள்,அதற்குள் கையில் இருக்கும் சொர்கத்தை அனுபவித்து விடு...!
கோவை.சரவண பிரகாஷ்.
No comments:
Post a Comment