Thursday, 27 April 2017

ஒரு சொல் அனுப்பு காதலியே....!

காலப்பெருவெளியில் ஒரு பத்தாண்டு
கடந்த பின்னும் வற்றவில்லை
என் காதல் கடல்.....

மறைந்துபோனவளே!இன்னுமா காற்று
உன் காதில் கவி உரைக்கவில்லை
நான் இன்னும்உன்னை மறக்கவில்லை என்று...n

சூரிய சந்திரர் உனக்கு செய்தி சொல்லிருப்பார்களே
உன்னால் மனம் முடமாக்கப்பட்ட
ஒருவன் இன்னும் எழவில்லையென்று....

மழையினை ரசிப்பவளே
மலை போல காதல் இன்னும்
மனதில் இருக்குதடி....

என் இடப்பக்கத்தில் உனக்கு இடமில்லையடா
என்று சொன்னவளே இன்றும் என்
இதயத்தில் உனக்கிடமிருக்கிறது....

உயிர் இல்லாத உடலும்
நீ இல்லாத நானும்
சவம் தான்..

என் காதலோடு சேர்த்து என்னையும்
நிராகரித்தவளே!எனக்காக நீ வருவாய் என்று
இன்னும் நீளப்போய் சொல்கிறது என் நித்திரைகள்...

அண்டத்தின் அலசமுடியாத பிரேதேசத்தில்
நீ இருப்பதாய் அறிவு
எனக்கு அச்சுறுத்துகிறது.....

ஆனால்,உயிருக்குள் நீ
உறைந்திருப்பதாய்
உள்ளம் உரைக்கிறது...

என் காதலை
நீ புரிந்துகொள்ளவாய் என நினைத்தேன்
நீயோ,புரிந்து கொன்றாய்...

நீ புரிந்துகொன்றாலும்
கண்மணியே!என்
காதல் காதல்தான்...

அன்பே!மன்னவன் ஒருவன்
மண்ணோடு போனான் என்ற
செய்தி ஒருநாள் உன்வீட்டு வாசல்வரும்..

இயற்கை கடன் கொடுத்த
இந்த உடல் கல்லறையை அடையும் முன்
ஒரு சொல் அனுப்பு காதலியே
"நான் உன்னை காதலிக்கிறேனடா என்று....!"

கோவை.சரவண பிரகாஷ்.

No comments:

Post a Comment